புதன், 14 நவம்பர், 2012

ஒரு தேசம் இருக்கிறது


  ஒரு தேசம் இருக்கிறது
பட்டாம்பூச்சிகளும்
விண்மீன்களும்
நிலாவும்
சாக்லேட் வாசம் வீசும் பூக்களும் நிறைந்த
ஒரு குட்டி அரண்மனையுடன் ஒரு தேசம்.
பால் குடிக்க மறுத்து
டம்ளர் தட்டிவிட்ட
'
ஆனந்த வர்ஷினி’யால்
ஒரு உள்நாட்டுப் போர் தொடங்கியிருந்தது.
ராஜகுமாரிக்கும் மகாராணிக்கும்
இடையே நடந்த போர் வலுப்பட்டு
கிச்சன் தாண்டி
ஹால் கடந்து
ராஜ்ய பரிபாலனை
சிந்தனை செய்துகொண்டிருந்த
மஹாராஜாவிடம் வந்து சேர்ந்தது.
பால் குடிக்கும் அரச குமாரிக்கு
யானை சவாரி
வாக்குறுதி அளித்த ராஜா
டம்ளர் உடைத்தமைக்காக
ராஜாவுக்கும் ராணிக்கும்
பத்துப் பத்து முத்தங்கள் தரவும் ஆணையிட்டார்.
மிரட்டியது, திட்டியது எனக்
குற்றச் செயல் புரிந்த மகாராணி
ராஜாவுக்கும் அரசிளங்குமரிக்கும்
பத்துப் பத்து முத்தங்கள் தர வேண்டுமென்றும்
மீறினால்,
இரவு முழுதும் உறங்கவிடாது
தொல்லைகள் தொடரும்
எனக் கண்ணடித்து எச்சரிக்கை செய்யப்பட்டாள்.
அமைதிப் பேச்சுவார்த்தை
வெற்றி அடைந்ததை அடுத்து
பெரும் வள்ளலும்
பேரன்பும்கொண்ட ராஜா
ராணிக்கு ஒரு முத்தமும்
ராஜகுமாரிக்கு ஒரு முத்தமும்
இனாமாக வழங்கி ஆசீர்வதித்தார்.
ஒரு தேசம் இருக்கிறது
நான்கு திசைகளிலும்
முத்தங்கள் சூழ்ந்த என் தேசம்
அந்நியர்களுக்கு அனுமதி இல்லை.

- கணேஷ்மூர்த்தி

பிரசுரம் : அனந்த விகடன்  14-நவம்பர்-2012

கருத்துகள் இல்லை: