வியாழன், 1 நவம்பர், 2012

தொட்ட சிணுங்கி


சிறு வயது முதல் தொட்ட சிணுங்கி தேடி, அதை சீண்டி விளையாடுவது ரொம்பவும் பிடித்தம்.

ஒவ்வொரு முறையையும் அவளை சீண்டி, பின்னொரு சமயம் பாவம் இனி அவளை சீண்டுவதில்லை என்று முடிவெடுத்து. இதுதான் கடைசி சீண்டல் என்று சத்தியம் செய்து, அவளை பார்க்கும் எல்லா சமயங்களிலும் சத்தியம் மீறுவதே வாடிக்கையாகிவிட்டது.



ஒரு முறை வைரமுத்து அவர்களின் கவிதை ஒன்று படிக்க நேர்ந்தது, "தொட்ட சிணுங்கி தொட்டு அது மலரும் வரை பார்த்ததுண்டா" என்று ஒரு வரி.பல முறை அவளை சீண்டியதுண்டு, ஆனால் ஒரு முறை கூட அவள் மலரும் வரை பார்ததில்லயே என்கிற குற்ற உணர்வு மனம் முழுவதும்.

பின் எல்லாமுறையும் அவள் மலரும் வரை பார்பதற்க்காகவே சீண்டினேன். அத்தை வீட்டு தோட்டத்தில் தொட்டுவிட்டு, மலர்வதற்காக காத்திருந்த சமயம் அத்தை ஏதோ ஒரு வேலைக்காக அழைக்க அன்றும் முடியாமல் போனது. பிறிதொரு சமயம் பாட்டி வீட்டில் , எல்லோரும் விளையாட அழைக்கையில் மதியிழந்து சென்றேன், இப்படியாக ஒரு முறை, இருமுறை பின் பலமுறை நீ மலரும் தருணம் பார்க்க காத்திருக்க முடியாமல் போனது மிக பெரிய துரதிர்ஷ்டம்.

நகர வாழ்க்கை ஓட்டதில் பலமுறை உன்னை தேடிய அலைந்து, பின் இடம் வாங்கி வீடு கட்டும்போது அங்கு பல பல தொட்ட சிணுக்கி பார்த்து ,இங்கு நம் விளையாட்டு பூரணம் பெரும் என்று சந்தோஷபடுகையில், என் மகளுக்கு நீ பரிச்யமானாய்.இன்று என் மகளுக்கு பிடித்தமான விளையாட்டு "Teasing touch me not".

இன்றும் ஒரு சிறு நப்பாசையுடன் உன்னை சீண்டி , மலரும் வரை காத்திருக்க முயற்சிக்கும்போது, மகள் கூப்பிடுகிறாள் மம்மி " Come here, some more touch me not are left out to tease"....

எங்களது எல்லா சீண்டல்களுக்கும் சேர்த்து மன்னிப்பை தவிர நான் உன்னிடம் என்ன கோரமுடியும்???

கருத்துகள் இல்லை: