புதன், 20 பிப்ரவரி, 2013

ரசித்தவை 02

 
"ரொம்ப நாட்களுக்கு பிறகு நான் பிடித்த பட்டுப்பூச்சியை,அதை பிடித்த நேரத்தின் சந்தோஷத்தோடு உங்கள் கையில் அல்லது என் மிக அருகில் எதிர்படுகிற மனிதனின் உள்ளங்கைக்கு மாற்றிவிட்டால் போதும்."

-- வண்ணதாசன்


மழை
ஞாபகமிருக்கிறதா?
பத்து இருபது நாட்களுக்கு முன்பு சென்னையிலே மழை பெய்தது.
மழைக்கு என்ன அது எல்லா ஊரிலும்தான் பெய்யும்.
எல்லோருக்காகவும் பெய்யும்.
அன்று சென்னையில் மழை பெய்யது அவ்வளவுதான்.
மழை தான் பெய்கிற நேரத்தை அழகாகத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.
சிலசமயம் இரவு முழுவதும் விடியவிடிய.
சிலசமயம் விடியும்போது அதிகாலையில்.
நான் பார்த்த சென்னை மழை மாலையில் பெய்தது.
இரவுக்கு முன்பு வருகிற மாலையில்.
ஒரு மோசமான கோடைகாலத்திற்கு பின்பு பெய்த முதல் மழையது. தொடர்ந்து கனமாக பெய்து கொண்டிருந்தது.
நான் வாசல் பக்கம் வந்து மழை பார்த்துக்கொண்டிருந்தேன்.
மழையைப் பார்க்கவும் செய்யலாம்,
கேட்கவும் செய்யலாம்.
உங்களுக்கு பிடித்த நீர்வண்ண ஓவியத்தை அது உங்களுக்கு பார்க்கத்தரும். உங்களுக்கு பிடித்த நீராலான ஒரு பாடலை அது இசைத்து பெய்யும். உங்களை ஒரு ஈர நடனத்திற்கு மழை இடைவிடாமல் அழைக்கும்.
மழையின் திருவிழாவில் குழந்தைகள் உடனடியாகவும், நாம் சற்று தாமதமாகவும் தொலைந்து போவோம்.
ஆனால், அன்று என்னைத் தவிர யாருமே தொலையக் காணோம்.
ஒரு வாடகைக்கார் ஓட்டுனர் புகைபிடித்தபடி நிற்கிறார்.
ஒரு தையல்காரர் வாகை மரத்தின் கீழ் தன் தையல் இயந்திரத்தை மூடி அவர் மட்டும் நனைந்து கொண்டிருக்கிறார்.
வேறு யாரும் தெருவிலே இல்லை.
நான் எதிர்பார்த்தது மழையில் நனைகிற குழந்தைகளை,
வீட்டிற்குள்ளிலிருந்து தெருவிற்கு ஓடிவந்து கைகளை உயர்த்தி மழைநடனம் ஆடுகிற குழந்தைகளை.
அந்த நடனத்தில் மழை எப்போது குழந்தைகள் ஆகிறது என்றும்,
குழந்தைகள் எப்போது மழையாகிறார்கள் என்றும் நமக்குத் தெரியாது. ஆனால், ஆகிவிடுவார்கள்.
அன்று மழை மட்டுமே பெய்து கொண்டிருந்தது.
ஒரு தனித்த பூனைக்குட்டி போல மழை தன் வருத்தமான குரலில் குழந்தைகளையெல்லாம் கூப்பிட்டுக் கொண்டேயிருந்தது.
தானியங்கள் இல்லாத இடத்திற்கு குருவிகள் வருவதில்லை.
குழந்தைகள் நனையாத தெருவிற்கு மழை வராமல் போகும் சாத்தியங்களும் உண்டு.
ஒரே ஒரு காகதக்கப்பல் விடுவதற்காகவும், அது சற்றுதூரம் போய் சாய்ந்து விழுவதற்காகவுமாவது மழைத்தண்ணீர் தெருவில் ஓட வேண்டும்.
குழந்தைகளை மழை பார்க்க சொல்லுங்கள்.
நீங்கள் அப்படி சொல்லவே வேண்டாம்.
எப்போதும்போல மழை பெய்யும் போதும் நீங்கள் அசையாமல் அமர்ந்து பார்க்கிற தொலைக்காட்சியை அணைத்துவிட்டு உங்கள் வாசலுக்கு அல்லது உங்கள் அடுக்ககங்களின் விளிம்புகளுக்கு எழுந்துவந்து நில்லுங்கள். குழந்தைகளும் உங்களோடு வந்து நின்று மழைபார்க்கத் துவங்கிவிடுவார்கள். உங்கள் கைகளை நீட்டி மழைத்தாரையை ஏந்துங்கள்.
ஒரு தலைவாழையின் பக்கக்கன்றுகள் போல உங்கள் குழந்தைகளும் தன்னுடைய கைகளை நீட்டி மழையை ஏந்தும்.
இதுவரையில் வந்த பண்டிகைகளில் கொளுத்திய மத்தாப்புகளைவிடவும் கூடுதலான அழகுடன் அந்த பிஞ்சு உள்ளங்கைகளில் மழைத்துளி விழுந்து தெறித்து பிஞ்சு வானவில்களை உண்டாக்கும்.
மழை பாருங்கள்,
மழையும் உங்களைப் பார்க்க விரும்புகிறது.
- வண்ணதாசன்

ரசித்தவை 01



சமீபத்தில் மிகவும் ரசித்த கவிதை.. ஸ்மைல் பக்கம் வலை பதிவில் பகிரப்பட்ட கவிதை .இதை எழுதியது  தேவதேவன் அவர்கள்.

சிபிச் செல்வன் தொகுப்பில் வெளிவந்த காலச்சுவடு கவிதைகள் (1994-2003) என்ற கவிதை நூலிலிருந்து.....


விரும்புவ்தெல்லாம் ஒன்றே   
விரும்புவதெல்லாம் இந்த மரத்தைப் போலவும்

இந்த பறவையை போலவும்

இந்த மிதிவண்டியைப் போலவும்

இவ்வுலகில் வாழத்

தகுதி பெற்றிருத்தல்

ஒன்றே!!
.

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

தொலையாத உன் நினைவுகளுடன் - 2




கண்ணீரில் மூழ்கி
கடிகாரம் வீணாகி
நீள் இரவுகளாகிப்போகிறது ..........

ஈரம் துடைக்க
கனவுகள் கைகொடுத்தால்
கொஞ்சமேனும்
மீள்வேனோ??

- அகன்


 

காதலும் காதல் சார்ந்த கவிதையும் - 5



நான் ரசித்த
எந்த கவிதையாலும்
காதலை
சொல்லமுடியவில்லை
உன் கண் பேசும்
காதலை போல் !!

- அகன்

 

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

இனிமே "ஐ லவ் யு" சொல்லாதீங்க

  காதலர் மாதம் : இந்த பதிவு போடா சரியான சமயம்னு நினைக்கறேன் . ஊர் உலகமே " லவ் யு "ன்னு சொல்லி குறுந்தகவல் அனுப்பி லவ்வு வாங்க. முகநூல், கீச்சு, எங்கும் எதிலும் " லவ் யு " . காதல் ரொம்ப ஆழமான விஷயம் அப்படினெல்லாம் மாறி , " லவ் யு "சொல்லறது ரொம்ப சாதரணமா போயிடிச்சு.

  குழந்தைங்க எல்லாம் குட் நைட் , தேங்க்ஸ் ,சாரின்னு சொல்லற மாதிரி ரொம்ப சாதரணமா " லவ் யு" சொல்லுதுங்க. இன்னைக்கு எங்க அப்பா என் பொண்ணு கிட்ட " லவ் யு" சொல்லறார். எங்க பாத்தாலும் " லவ் யு" பேனர் , போஸ்டர், குறுந்தகவல், மின் அஞ்சல்.

யாரையாவது உருகி காதலிச்சி ரொம்ப யோசிச்சு " லவ் யு" சொல்லறாங்க , அதே ஆளுங்க ஒரு காதல் கவிதைக்கும் , ஒரு இளையராஜா பாடலுக்கும் ஒரே தொனில " லவ் இட்" ன்னு சொல்லும் போது அந்த " லவ் யு" க்கான தீவிரம் கொறஞ்சி போறமாதிரி தோணுது.முகநூளில் ஒரு பதிவுக்கும், சில புகைப்படங்களுக்கும் கூட <3 சொல்லறாங்க.

  எல்லா விஷயத்துக்கும் "ஐ லவ் இட்"டுன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டோம். " லவ் இட்" என்று ரொம்ப இஷ்டமான படம், பாட்டு, ஐஸ் கிரீம், துணி, மழை, மேகம் எல்லாத்துக்கும் சொல்லறோம். ஒரு அழகான நாய் குட்டிக்கு கூட "ஐ லவ் இட்" சொல்ல ஆரம்பிச்சிட்டோம்.

அர்த்தம் ஒன்னு தான்னாலும், வேற மொழியில சொல்லும் போது அந்த வார்த்தைகளுக்கு அழுத்தம் கம்மியாவும், தாய் மொழில சொல்லும் போது அழுத்தம் அதிகமாவும் இருக்குற மாதிரி ஒரு உணர்வு. அது மட்டும் இல்லாம, காதல் அப்படிங்கறது ரொம்ப ஸ்பெஷல் , அத நமக்கானவங்ககிட்ட மட்டும் பகிரவேண்டிய ஒரு விஷயம் . " நான் உன்னை நேசிக்கறேன் " அல்லது "நான் உன்னை காதலிக்கறேன்" என்ற வரிகள் காதலை , அதுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையோட அந்த கணம் குறையாமலும் பகிரமுடியும்.

"நான் உன்னை நேசிக்கறேன் " , "நான் உன்னை காதலிக்கறேன்"என்ற வரிகள் காதலை நீர்த்துப்போக விடாமலும் அதன் ஆழமும், அழகும் குறையாமலும் பாதுகாப்பதாக தோணுது. இனி காதலை " லவ் யு" என்று சொல்லாமல் அழகான தமிழில் பகிர்வோம். காதல் ரொம்ப சாதாரண விஷயம் இல்ல, அதனால புடிச்ச பாட்டுக்கும், புடிச்ச முகநூல் ஸ்டேடஸ்க்கும் " லவ் இட்" சொல்லுவோம். புடிச்ச பொன்னுகிட்டயோ, பையன் கிட்டயோ அழகா " நான் உன்னை நேசிக்கறேன் " அல்லது "நான் உன்னை காதலிக்கறேன்" என்று காதல் சொல்லுவோம்.

நமக்கு பிரியமானவர்களை நேசிப்போம் ................