சனி, 27 அக்டோபர், 2012

கரும்பு சாறும் கார்பரேட் வாழ்க்கையும்!!


எனக்கும் கரும்பு சாறுக்கும் மிக நீண்டகால வரலாறு உண்டு.பெரியப்பாவுக்கு எறையூர் சக்கரை ஆலையில் வேலை, காலாண்டு, அறையாண்டு, முழாண்டு விடுமுறைக்கு அங்கே தவறாமல் செல்வோம்.

எல்லா ஆண்டும் ஆலை உள்ளே சென்று கரும்பு சாறு குடிப்பது வாடிக்கை. ஆலை பிரவேசத்திற்கு தயாராவது ஒரு மிகப்பெரிய சவால். கறுப்பும் கருப்புசார்ந்த வண்ணத்தில் உடை தேடுவதில் தொடங்கி , ஒரு காலி தண்ணி கேன் தேடி , எப்போதும் எலுமிச்சை பழம் வாங்க மறந்து கடைசி நிமிஷம் ஓடி வாங்கிவந்து, இப்படி ஆலை பிரவேசம் என்பது மிக பரபரப்பான தருணம்.



நாங்கள் தான் ஒவ்வொரு முறையும் புதுப்புது எதிர்பார்ப்புகளுடன் தயாராவது.அதே ஆலை, எந்த மாற்றமும் இன்றி… கரும்பு எந்திரத்தில் போடுவது,சுத்தீகரிப்பது ,இப்படி மேம்போக்காக சுற்றிவிட்டு, பூப்போல கொட்டும் சர்க்கரையை பார்ப்பது ஒரு அலாதியான சுகம். அள்ளி அள்ளி தின்று, திகட்டி போதுமென்று வெளியேறி, கடைசியாக கரும்பு சாறு.

மற்றவர்கள் எல்லோரும் கரும்பு சாறுக்காக சர்க்கரையை சுவைக்காமல், முட்ட முட்ட சாறு குடிப்பார்கள். நான் மட்டும் ஒவ்வொரு முறையும் சர்க்கரையை மட்டும் திகட்ட திகட்ட தின்றுவிட்டு கரும்பு சாறு சுவைக்காமல் வருவேன். அண்ணா,அக்கா எல்லோரும் திட்டி தீர்த்தார்கள், இந்தமுறையும் கரும்பு சாறு குடிக்காமால் வந்ததிற்க்கு …விடுமுறை முடிந்து கல்லூரி செல்கையில் தோழிகளுடன் சொல்லும் முதல் கதை  இதுவே.


காலங்கள் ஓட, இன்று பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை- மிகவும் பரபரப்பாக வாழ்க்கை. எல்லா மத்திய உணவு இடைவேளையும் சக தோழர்கள் அனைவரும் பழ சாறு குடிக்க, நான் மட்டும் தினமும் கரும்பு சாறு குடிக்கிறேன்.
சாறு குடிக்கும் அந்த பத்து நிமிஷம், ஏசி குளிர்,சக தோழர்கள்,மீட்டிங், கால், கிளளையன்ட், அந்த அமைதியான இடம், எல்லாம் மறந்து ஆலையின் சத்தமமும், பிசுபிசுப்புமும், அண்ணா,தம்பி,அக்காவுடனான சண்டையும் , சர்க்கரையை அள்ளித்தின்று போட்டிருந்த உடையிலேயே கைதுடைத்ததும், தோழி கல்பனாவின் திட்டும் என்று நினைவுகளில் பின்நோக்கி பயணிப்பது ஒரு அலாதியான சுகம்.

காலி கோப்பையை கிழேவைக்கும் போது ,மனம் முழுவதும் தித்திப்பு.ஒரு சில சமயங்களில், அய்யோ இன்று வெளிர் நிற உடையாயிட்ற்ற்றே-சாறு குடிக்கும்போது ஆலையின் அழுக்கு ஒட்டிக்கொள்ளுமோ என்றும்கூட நினைப்பதுண்டு.

கரும்பு சாறு குடிக்கையில் ஏன் உன் முகத்தில் மந்தகாசம் என்று கேட்கும் எல்லோருக்குமான பதில் என் புன்னகை மட்டுமே. விளக்கமுடியவில்லை, கரும்பு சாறு கொடுக்கும் சந்தோஷத்தை யாரிடமும்.

எங்க வீட்டு புங்கமரம்


ஆறாம் வகுப்பு படிக்கும் சமயம் கட்டிய புது வீடு. வீட்டு சுற்று சுவர் பக்கம் நானும் தம்பியும் நட்ட புங்க மரம், எங்கள் வீட்டு செல்லப்பிள்ளளையாய் என்னோடு வளர்ந்தது. என்னுடைய கண்ணீர்கள் பலவும், என்னுடைய சந்தோஷங்கள் யாவும் தாங்கிய என் ஆருயிர் தோழன் அவன். எனது அறை மேல் எப்போதும் சாய்ந்தே இருப்பான்,

நான் அவன் நிழல் தேடி போகும் சமயம், எப்பொழுதும் நிழலுடன் சேர்த்து பூக்களும்  சொரிவான். மழை விட்ட எல்லா நாட்களில் நானும் அவனும் விளையாடும் ஆட்டம் மிகவும் சுவாரஸ்யமானது.மழையில் நனையாமல் வந்து அவன் இடம் தேடி, அவன் கிளை அசைத்து ஈரம் பூசிகொள்வது எப்பவும் மிக சுவாரஸ்யமான விளையாட்டு.




பூப்படைய்ந்த சமயம் பத்து நாட்கள் ஆண்களை பார்க்கக்கூடாது என்று பாட்டியின் உத்தரவு. காரணம் யாதென்றால் ஆண்களை பார்த்தால் முகத்தில் பரு வந்துவிடுமாம் .நான் அந்த பத்து நாளும் உன்னுடன் மட்டுமே பேசியதால்தான் என் முகத்தில் நிறைய பருக்களோ??? இன்றும் கண்ணாடி பார்கையில் உன் நியாபகம் தான்.

என் கோபம்,சந்தோஷம் , அழகை ,பொய் , நிஜம்,எல்லாம் அறிந்த உற்றநண்பன்… படிப்பது, தோழிகளுடனான கதையளப்பு எல்லாம் உன் நிழலில்தான்.சில வருடங்களில் என் சின்னஞ்சிறு தோழன் அசுர வளர்ச்சியுடன் நான் கட்டியணைக்க முடியாமல் திணறும் படி வளர்ந்துவிட்டான். உனக்கு நிறைய தண்ணீருடன், என்னுடைய அன்பையும் ஊற்றினேன் போல, அதனால் தான் இந்த அசுரவளர்ச்சியோ என்று பலமுறை யோசித்ததுண்டு.

 நான் பெருமையுடன் உன் வளர்ச்சி பற்றி பீற்றிகொள்கையில், அப்பா இந்த மரம் இருந்தால் சுற்று சுவர் விழுந்துவிடும் ,விரிசல் பெரிதாகிவிட்டது என்று ஆரம்பித்துவிட்டார்.என்னுடைய கெஞ்சலும்,கொஞ்சலும் , அழுகையும்,ஆர்ப்பட்டமும் சேர்ந்து உன்னை காப்பாற்ற முடிந்தது.அது தற்காலிக முயற்சி என்று தெரியவில்லை என் புத்திக்கு . உன் நீர் பாசனத்தில் என் அன்பை கலக்காமல் இருந்திருக்கலாமோ என்று அதன் பின் பல முறை கண்ணீர்ல் நினைந்ததுண்டு…

மேற்ப்படிப்பிற்கு வேற்றிடம் செல்கையில் அம்மாவிடம் ஆயிரம் முறை உன்னை நன்றாக பார்த்துக்கொள்ள சொல்லி சென்றது இன்றும் என் நினைவில். என் முதல் "காதல்" - இல்லை இல்லை - "நேசம்" பூத்த சமயம்… .விடுமுறைக்கு ஊர் வந்து, நான் நாணம் பூசிக்கொண்டு உன்னிடம் வந்து நிற்கையில் என் மேல் கோபம் கொண்டு மலர் சொரியாமல் நின்றாய். பிறகு நீ தான் என் தோழன் என்றும், அவன் நேற்று முளைத்தவன் என்றும், எனக்கு பிள்ளை பிறந்தால் உன் கிளையில் தான் முதல் தூளி கட்டுவேன் என்றும் உன்னை தேற்றினேன். என் வெட்கம் தின்று, எங்கள் இருவர் பெயரையும் உன் மேல் எழுதியவுடன் பூக்கள் சொரிந்து வாழ்த்து கூறினாய். நீ அல்லவோ என் உயிர் நண்பன். அப்பொழுது தெரியாது என் உயிர் தோழனும்,நேசித்தவனும் ஒரே சமயம் என்னை பிரிவார்கள் என்று.

முதல் நேசம் முற்று பெறாமல் கண்ணீருடன் வருகையில் நீ இருப்பாய் என்னை தாங்கிக்கொள்ள என்று உன் மடி தேடி வந்து நின்றேன்….நீ என் உற்ற தோழனாய் என்னை பரிகாசம் செய்யாமல் என் மனம் புரிந்து அமைதியாய் என் சோக கதைக்கு காது கொடுத்தாய்.

ஆனால் அப்பா இந்தமுறை என்னுடைய கண்ணீர், கதறல் எதற்கும் காதுகொடுக்காமல் உன்னை வீழ்த்த முடிவுக்கு வந்துவிட்டார். என்னுடைய வாழ்க்கையில் அது ஊழி காலம், நேசித்தவனையும் ,தோழனையும் ஒரே சமயத்தில் இழந்து என்றுமே வற்றாத கங்கை என என் கண்ணீர்.இ ன்றும்,  நீ இல்லாத அந்த வீடு கலையிழந்து,ஒரு செங்கல் சுவராக மட்டுமே இன்று உள்ளது.

காலம் எல்லா வித வலிகளையும் ஆற்றவல்லது… நானும் என் வாழ்க்கை பயணத்தில்…இன்றும் எங்காவது புங்க மரம் பார்க்கும்போதெல்லாம் என் தோழன் உன் நினைவு மட்டுமாக.

இன்று, என் அம்மா என் குழந்தைகளிடம் "உங்க அம்மா அந்த புங்க மரம் வெட்டும் போது அழுத அழுகை இருக்கே" என்று ஸ்வாரியசியமாக கதை சொல்லும்போதெல்லாம் இன்றும் கண்ணீர் சுரக்கிறது - இன்னும் கூட உனக்கான என் கண்ணீர் மிச்சம் இருக்கிறது.

இன்ப??? சுற்றுலா



அம்மா, அப்பா, , கணவர் மற்றும் குழந்தைகளுடன் இன்ப சுற்றுலா செல்ல முடிவானது. எங்க போகலாம்னு நானே முடிவு செய்யனும்னு சொல்லிட்டாங்க . அலுவலகத்தில் "டேமஜெர்" அப்படி இப்படி போகும்போது கணினியில் இடம் தேடி, வரைப்படம் பிரிண்ட் அவுட் எடுத்தாச்சு. கணவரிடம் இருந்து போன்,"கொஞ்சம் வேலை அதிகம்… வீட்டுக்கு போகும்போது நீயே ஸ்நாக்ஸ் வாங்கிட்டு போ"ன்னு சொல்லி….



நொறுக்கு தீனிக்கு கடைக்கு சென்று சின்னதுக்கு,பெருசுக்கு பிடித்தவை எல்லாம் வாங்கிவந்து கட்டை ப் பையில் அடுக்கும் சமயம் , "மம்மி உருளைக் கிழங்கு சிப்ஸ் வாங்கலையா ? மறந்துட்டபாரு, எனக்கு கண்டிப்பா வேணும்னு" சின்னது ஒரே நச்சி. அப்பாவிடம் சொல்லி வாங்கிவந்த பிறகுதான் குட்டீஸ் குதிப்பது நின்றது.

அய்யோ , பேப்பர் பிளேட் மறந்துட்டேன் என்று திரும்பவும் கடைக்கு சென்று, விட்டுப்போன பொருள் எல்லாம் வாங்கிவந்து அடுக்கி முடித்து. தண்ணி,கரண்டி,துவலை,ஸ்பூன் எல்லாம் எடுத்து வைத்து அப்பாடா என்று ஆனது.

சுற்றுல்லா சாப்பாடு என்ன எடுத்துட்டு போகறதுன்னு ஒரு பெரிய சாதக பாதகங்களுக்கு பிறகு சப்பாத்தி,தக்காளி தொக்கு, கொஞ்சம் எலுமிச்சை சாதம் , தயிர்சாதம் , என்று முடி வு செஞ்சோ
ம்.

கேமரா சார்ஜ் போட்டு, குட்டீஸ்க்கு விளையாட பந்து, டிரஸ் , எக்ஸ்ட்ரா ஒரு செட்டு டிரஸ் எல்லாம் எடுத்து வச்சி படுக்க போகும்போது மணி 11.

6 மணிக்கு அலாரம் அடிக்க, அம்மாவும் நானுமாக எல்லாம் சமைச்சு எடுத்து வச்சி, காலை டிபன் ரெடி பண்ணி,குளிச்சி , பசங்கள ரெடி பண்ணி , காரில் ஏறும்போது மணி 11. ஏறி உக்காந்து ஒரு பத்து நிமிஷத்தில் மம்மி தண்ணி, அடுத்த அரை மணியில் சூச்சூ. பெரிய போராட்டத்துக்கு பின்னா டி செல்ல வேண்டிய இடம் வந்து சேந்தாச்சு. அப்பாடா!!

ஒரு பத்து நிமிஷம் சறுக்குமரம், ஊஞ்சலும் மாத்தி மாத்தி விளையாண்டுக்கிட்டு இருக்கும் போது, சின்னது வழக்கம் போல கீழ விழுந்து, அழுது, மாத்தி மாத்தி சமாதானம் படுத்தி... ஒரு வழியா எல்லாம் அடங்கி, சாப்பாட்டு கடை ஆரம்பிக்கும்போது மணி 2 . குட்டீஸ் அதுவேனும், இதுவேண்டாம்னு ரகளை பண்ணி எல்லாரும் சாப்பிட்டு முடிக்கும் போது மணி 3. திரும்ப மணல் விளையாட்டு ஒரு அரைமணிநேரம்,திரும்பவும் சறுக்குமரம், ஊஞ்சலும் மாத்தி மாத்தி விளையாடி…உக்கார நேரம் இல்லாம திரும்பவும் எல்லாத்தையும் அடுக்கி, டிராபிக்ல மாட்டி வீடு வந்து சேரும் போது மணி 6.30. சாயங்கால டீ போட்டு குடுத்துட்டு , அம்மாவும் நானுமாக பாத்திரம் விளக்கி ,ராத்திரி சாப்பாடு ரெடி பண்ணி…..".. ஸ்ஸ்ஸ்.….அப்பா"

எல்லாம் முடிந்து படுக்கபோகும் முன் அம்மாகிட்ட கேட்டேன்,

"எவம்மா இதுக்கு இன்ப சுற்றுலானு பேரு வச்சான்???"

வியாழன், 25 அக்டோபர், 2012

அவள் நிலமானாள்; அவன் மழையானான்!




*"யாயும் ஞாயும் யாரோ கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்!
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே"

(குறுந்தொகை:பாடல்:40 பாடியவர்:செம்புலப் பெயனீரார்)


பொருள் விளக்கம்:
யாய்=தாய். ஞாய்=தாய். எந்தையும் நுந்தையும்= என் தந்தையும் உன் தந்தையும்.
செம்புலம்=செம்மண் நிலம். பெயல்நீர்=மழை

"நட்சத்திரங்கள் முகம்பார்த்து மினுக்கிக் கொள்
நாளெல்லாம் தேடித் தொங்கவிட்ட நிலவென்னும் கண்ணாடியில்,
நம்மிருவர் முகம் பார்க்க முடியாதெனினும்; கண்ணே!
நான் உன் முகத்தை நிலவாகவே பார்க்கின்றேன்!
மெய்யாகவே நிலவைப்போல் இருக்கவேண்டுமென்றுதான் - நீ
மைகொண்டு கண்ணெழுதி, கன்னத்தில் புள்ளியொன்றும் கருநிறத்தில் வைத்துக் கொண்டாய்!
தேங்காய்க் கீற்று போன்ற பிறை காட்டு எனக் கேட்டால்
பாங்காய் உன் முகத்தை என் முகத்தில் பதித்துப் பைங்கிளியே!
நேர்வகுடுக்குக் கீழுள்ள உன் நெற்றியினைக் காட்டிடுவாய்!
நேரிழையே! நீ எனக்கு விளக்க வேண்டும்;
நிலவைக் கறுப்பாக்கும் "அமாவாசை" ஒன்று வருமே!
நீ அதற்கு விதிவிலக்கா? என நான் கேட்டபோது
என் மடிமீது முகமுழுதும் புதைத்துக்கொண்டு,
உன் கருங்கூந்தல் மட்டுமே நான் காணப் படுத்துக் கொண்டாய்!
அதனை நான் அமாவாசையென எண்ணிக்கொள்ள வேண்டுமென;
அழகோவியமே! நீ உன் விரல் கொண்டு சுட்டிக்காட்ட,
கார்குழலே நான் கோதிக்கொண்டே
கண்மணியே உன் உச்சிமீது முத்தமீந்தேன்!
பாம்பு; நிலவை விழுங்குகின்ற பழம் புராணக் கதையொன்றை
ஆம்பற் கொடியிடையாளே! நம்புவதற்கில்லை யென்றேன்; நீயோ,
மறுத்துரைத்து வாதிட்டு "இதோ, இந்த நிலவின் கன்னத்தை
அறுத்தெடுக்காமல் வாய்க்குள் விழுங்குகின்ற உமது செயலுக்கு என்ன பெயராம்?" எனக்கேட்டு,
"பழம் புராணப் பாம்பு விழுங்கும் கதை பொய் எனினும்;
பழம் போல எனை விழுங்கி விழுங்கி விடுவிக்கும் இந்தப் பள்ளியறைக் கதை மெய்தானே" என்றாய்!
உன் கவிதை நடைப் பேச்சில் மயக்கமுற்று
ஒரு நூறு முத்தங்கள் உடனே தந்தேன்! நீயும் திருப்பித் தந்தாய்!

அதையெல்லாம் மறந்துவிட்டு; உனைப் பிரிந்து
அயலூரில் நெடுநாள் தங்கிவிட்டேன் என்று
ஆருயிரே! அகம் நொந்து நீ ஊடுவது நியாயம்தானா?
ஊடல் புரிவதிலும் ஓர் அழகைத்தான் காணுகின்றேன்.
பாடல் பிறப்பதற்கு இசை கூட்டல் வேண்டுமன்றோ! அதுபோலக்

கூடல் விழா தொடங்குவதற்கு,
ஊடல்தான் கொடியேற்றி வைக்க வேண்டும்!

அதனாலே உன் ஊடல் கண்டு உவகை மிகக் கொள்கின்றேன்!
ஆனாலும் அளவுக்கு மீறிவிட்டால் அமுதமும் நஞ்சாகிவிடுமன்றோ!
தொட்டால் நெருங்காமல் நீ எட்டி விலகும்போது
தொலைவிலிருந்து உன் முழு எழிலைப் பருகுகின்றேன்!
மொட்டாய்க் குவிந்து நிற்கும் மார்பகத்து ஆடையினை நான் நகர்த்த - அது
கட்டோடு பிடிக்காமல் இழுத்துப் போர்த்தி - வாய்
மொழியால் "விடுங்கள்" என்று நீ வெடுக்கென்றுரைத்தாலும் - உன்
விழி மட்டும் ரகசியமாய் ஓர் உடன்பாட்டுக்கு வருதல் கண்டு; இதயம்,
பொழிகின்ற இன்ப மழைச் சுகத்தை நான் என்னென்று சொல்வேன்!
வழிகின்ற தேனருவிப் பக்கம் போவோம் வா! - வீணாய்க்
கழிகின்றதே பொழுது என; நம் வரவுக்காகக்
காத்திருக்கும் மலர் மெத்தையினைப் பார்!
கோத்திருக்கும் முத்தாரப் பல்வரிசைப் பேழையின்
மூடியினைப் புன்சிரிப்புத் திறவுகோலால் திறந்துவிட்டு
ஊடியது போதுமென என் தோளில் ஊஞ்சல் ஆடிடுக!
வாடியதோ என வண்ணத் தமிழ்க்கிளியின் நெஞ்சம்?
தேடியதோ? தேடிப்பின்னர் திகைத்ததோ? ஒருவேளைத்
திரும்ப வருவேனோ, மாட்டேனோ என்று
இரும்படிக்கும் உலைவீழ்ந்த புழுவாகத் துடித்ததோ?"

இவ்வாறு
பிரிந்திருந்த காதலனின் வரவு பார்த்து - மனம்
வருந்தி வீழ்ந்த பெண்மான் ஒன்று - அவன்
வந்தபின்னும் ஊடலுற்றுச் சினந்தபோது, அவளைத் தன்
வசமாக்க வாரியிறைத்திட்டான் வர்ணனைப் பூமாரி!

அவளோ;
இன்னும் ஏனவன் பேசிக்கொண்டு நிற்கின்றான் -
இழுத்தணைத்துப் பசும்புல் தரையில் படுக்கவைத்து
கன்னம் சிவக்க, கனியுதடு மெல்ல வீங்க - முன்போல்
கணக்கென்ன நூறு? முன்னூறு நானூறு முத்தங்கள் கொடுத்திட்டால்
கசக்குதென்று கழுத்தைப் பிடித்துத் தள்ளியா விடுவேன்?
கட்டியணைக்கவே அவன் கரம் தாவாதோ தன்மீதென்று,
தணலைப் போல் கொதிக்கின்ற காதல்தனை
தன் நெஞ்சுக்குள் அடைத்து வைத்துத் தத்தளித்தாள்!

"அன்றென்னை அமளியிற் கிடத்தி
அன்றிலடி நாமிருவர் அரைநொடியும்
பிரிவதில்லை! ஆணையடி அன்பே என்று
விரிவுரைகள் ஆற்றினீரே - என்ன பயன்?
விடிந்தால் ஒரு திங்கள் முடிந்துவிடும் - இவள்
மடிந்தால் மடியட்டுமென்றுதானே கவலையற்று
மறுநாளே வருவதாய்ச் சொன்ன சொல்லை மறந்து போனீர்!
மறப்பது ஆடவர்க்கு இயற்கையெனக் கூறிவிடும்! நானும்; உயிர்
துறப்பதும் மகளிர்க்கு எளிதேயென்று காட்டுகின்றேன்."

- கலைஞர். மு. கருணாநிதி

இவ்விதம்

சொற்களுக்குச் சோக இசை சேர்த்து - அந்தச்
சொர்ணத்தின் வார்ப்படம் சுளையிதழ்கள் மூடுமுன்பே,
ஓடிவந்து கட்டிக் கொண்டான்! "நான்
தேடிநின்ற தெள்ளமுதே!" என அவளும் ஒட்டிக் கொண்டாள்!
வானூர்ந்த நிலவழகி; முகில் கொண்டு முகம் மறைத்தாள் வெட்கத்தாலே!
மானொன்று நாணமுற்று புதர் மறைவில் ஒதுங்கிற்றாங்கே!
கிள்ளைகளும், புறாக்களும் இணை இணையாய்க்
கிளைகளில் இருந்தெழுந்து "சிறிதேனும் இந்தப்
பிள்ளைகட்கு வெட்கமிலையோ! இத்தனைபேர் நம் மத்தியிலே
வெள்ளை மலர்ப் படுக்கையிலே காம விளையாட்டா? சிச்சி" எனக்கூறிப் பறந்தனவே!

ஊடலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு - இன்பக்
கூடல் முடித்து எழுந்தபோது - "இனியொருமுறை
"வாடல்" என்பது வாழ்க்கையில் வாராதே" என்று
ஆடல் தீர்ந்து தோகை மூடிய மயில் கேட்டாள்!

அவன், அவளைப் பார்த்து:
*"உயிரே! ஒன்று கேள்! உன்னையும் என்னையும்
உலகில் பிரிக்கின்ற சக்தி எதுவுமில்லை!
உனைப்பெற்ற தாய் யார் என்றோ
எனையீன்ற தா யார் என்றோ
உன் தந்தைக்கும் என் தந்தைக்கும்
உறவுமுறை என்னவென்றோ
இருவர் நாம் எவ்வழியில் வந்தோர் என்றோ
அறிந்திட விரும்பாமலே அறிமுகமானோம்!
எங்கிருந்தோ வந்தாள் என உன்னை நானும்,
எங்கிருந்தோ வந்தான் என என்னை நீயும்
ஏற்றுக்கொண்டோம்! இதயத்தில்;
ஏற்றிக்கொண்டோம்! இனியவளே!
செம்மண் நிலத்தில் மழை பொழிந்தால் - அந்த
நிலத்தொடு கலந்த நீரில்


சிவப்பு வண்ணத்தைப் பிரிக்க முடியாதன்றோ!
அஃதேபோல் நமது
நெஞ்சங்கள் இரண்டும் இணைந்துவிட்டன!
எனவே பிரிவு எனும் நினைப்பை
இக்கணமே அகற்றிவிடு!"

இந்தக் குறுந்தொகைப் பாடலை
இளங்குமரன் எளிமையாக்கிச் சொன்னவுடன்
மங்கைநல்லாள், மீண்டும் நிலமானாள் - அவன்
மழையானான்!

( நன்றி: சங்கத் தமிழ் )