சனி, 3 நவம்பர், 2012

மாமல்லபுரமும் சிவகாமியின் சபதமும்!!!

மாமல்லபுரம் -  குன்றுகள் குடைந்து செய்த கோவில்களாகவும், யானையாகவும், ரிஷபமாகவும்,சிங்கமாகவும் பார்த்து ,கடற்கரை கோவிலின் அழகை மட்டுமே ரசித்த அதே மாமல்லபுரம்...
பிறிதொருசமயம் 'சிவகாமியின் சபதம்'  பரிச்சயமாகி,  பின்  படித்து, அழுது, கரைந்து மீண்டும் மாமல்லபுரம் செல்கையில், மகேந்தர வர்மர், சிவகாமி, மாமல்லர், ஆயனார் என்று நினைவுகள் அந்த பல்லவகாலச்சுழலுக்குள் இழுக்கிறது.
கல்கி அவர்கள், சிவகாமியின் சபதம் புத்தகத்தின்  முன்னுரையில்,
“விதியின் எழுத்தை கிழித்தாச்சு! – முன்பு
விட்டகுறை வந்து தொட்டாச்சு!!”
என்னும் வரி ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தை போல தன்னை மதிமயங்கச் செய்தது என்றும், அகக் கண்ணகளில் எல்லா பாத்திரங்களையும் உணர்ந்ததாகவும் கூறுவார். கடைசி அத்தியாயம் முடிந்து, முற்றும்  என்று  கொட்டை எழுத்தை  போட்ட பிறகுதான் , மகேந்திரரும், மாமல்லரும், ஆயனரும்,சிவகாமியும் , பரஞ்சோதியும் தனது நெஞ்சிலிருந்து கீழறங்கி, “போய் வருகிறோம்” என்று அருமையோடு சொல்லி விடை பெற்றுக் கொண்டு சென்றதாக சொல்லுவார்.
கல்கி அவர்களின் ரசிகர்கள் பலரும், அவரைப்போலவே  மாமல்லபுரம் செல்கையில், பல்லவ தேசத்தை அகக் கண்களில் கண்டிருப்பர்  என்றே தோன்றுகிறது.
பன்னிரெண்டு வயது நிரம்பிய மாமல்லர் குன்றின் நிழலை பார்த்து இது யானையை போல் உள்ளது, இது கோவில் போல் உள்ளது என்று சொன்ன அத்துணையும் கண்முன்னே விரிகிறது.எந்த அரசரும் அடையமுடியாத கீர்த்தியை பல்லவ குலம் அடையும்  என்ற மகேந்திரரின்  கணவு பலித்துவிட்ட பிரம்மிப்பு. போரின் வெற்றி, தோல்வி பற்றிய கவலையின்றி, மாமல்லபுரத்தின் சிற்பவேலையின் குந்தகம் பற்றி மகேந்திர வர்மர் கவலை கொண்டது  இன்று மிகவும் நியாயமாகப்படுகிறது.
இங்குதான் சிவகாமி அம்மையார், காவி கட்டை கொண்டு குளத்தின் தண்ணீரையும், தாமரையும் வரைந்திருப்பரோ என்று மனதிற்குள்  கேள்விகள் பல. மாமல்லபுரம் அது கண்ட காவிய காதலையும் , ராஜ தந்திரத்தையும், கடல் வாணிபத்தையும்,  பல மந்திரலோசனயையும்  நம் மனத்திரையில் ஓடவிடுகிறது.
இன்று, அது வெறும் இன்ப சுற்றுல்லாவுக்கும் , பல வெளிநாட்டுப் பயணிகள் வந்துகூடும் இடமாகவும்  மட்டுமே பார்க்கப்படுகிறது.  மாமல்லபுரம் தன்னகத்தே பல கால சுவடுகளை சுமக்கிறது. சிவகாமியின் நேசமும் , மாமல்லரின் கடமையும் , கலைகள் மேல் மகேந்திரர் கொண்ட காதலும்  , ஆயனரின் அஜந்தா வர்ண ரகசியத்தை தெரிந்துகொள்ளும் ஆர்வமிகுதியும், நரசிம்மர்  பரஞ்சோதியாரின்  நட்பும் , புத்த பிக்ஷுவின் தந்திரமும் , காஞ்சியின் மீதான புலிக்கேசியின் காதலும் என்று   சிவகாமி சபதத்தின்  கதாபாத்திரங்கள்  மாமல்லபுரத்தில் ஜீவித்திருப்பதாக தோன்றுகிறது.
 
கடற்க்கரை மணல்வெளியில் திரியும் போதும் கூட , சிவகாமியின் சபதத்தில் வரும் திருநாவுக்கரசரின்  பாடல் வரிகள் ஞாபகத்திற்க்கு வருகிறது.
"முன்னம் அவனுடய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்
அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாள்"
 
மாமல்லபுரம் என்கிற சரித்திர புகழ்பெற்ற இடம் இன்று எதன் காரணமாக மருவி மகாபல்லிபுரம் ஆனதோ????? அதன் காரணம் யாதெனினும், மகாபல்லிபுரம் என்று யார் கூறும்போதும்  இல்லை  இல்லை இது மாமல்லபுரம்”, என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இதற்க்கு சிவகாமியின் சபதம் என்ற புதினத்தின் மேல் இருக்கும் ஈர்பா? அல்லது கல்கி அவர்களின் மேல் இருக்கும் மரியாதையா?? இல்லை மகேந்தர பல்லவர் மற்றும் நரசிம்மர் மேல் உள்ள பற்றுதலா ??? சிவகாமியின் மேல் உள்ள பரிதாபமா??
எதுவாகவும் இருக்கட்டும், எனக்கு இன்றும் என்றும் அது மாமல்லபுரமே!!!!
 

கருத்துகள் இல்லை: