சனி, 27 அக்டோபர், 2012

எங்க வீட்டு புங்கமரம்


ஆறாம் வகுப்பு படிக்கும் சமயம் கட்டிய புது வீடு. வீட்டு சுற்று சுவர் பக்கம் நானும் தம்பியும் நட்ட புங்க மரம், எங்கள் வீட்டு செல்லப்பிள்ளளையாய் என்னோடு வளர்ந்தது. என்னுடைய கண்ணீர்கள் பலவும், என்னுடைய சந்தோஷங்கள் யாவும் தாங்கிய என் ஆருயிர் தோழன் அவன். எனது அறை மேல் எப்போதும் சாய்ந்தே இருப்பான்,

நான் அவன் நிழல் தேடி போகும் சமயம், எப்பொழுதும் நிழலுடன் சேர்த்து பூக்களும்  சொரிவான். மழை விட்ட எல்லா நாட்களில் நானும் அவனும் விளையாடும் ஆட்டம் மிகவும் சுவாரஸ்யமானது.மழையில் நனையாமல் வந்து அவன் இடம் தேடி, அவன் கிளை அசைத்து ஈரம் பூசிகொள்வது எப்பவும் மிக சுவாரஸ்யமான விளையாட்டு.




பூப்படைய்ந்த சமயம் பத்து நாட்கள் ஆண்களை பார்க்கக்கூடாது என்று பாட்டியின் உத்தரவு. காரணம் யாதென்றால் ஆண்களை பார்த்தால் முகத்தில் பரு வந்துவிடுமாம் .நான் அந்த பத்து நாளும் உன்னுடன் மட்டுமே பேசியதால்தான் என் முகத்தில் நிறைய பருக்களோ??? இன்றும் கண்ணாடி பார்கையில் உன் நியாபகம் தான்.

என் கோபம்,சந்தோஷம் , அழகை ,பொய் , நிஜம்,எல்லாம் அறிந்த உற்றநண்பன்… படிப்பது, தோழிகளுடனான கதையளப்பு எல்லாம் உன் நிழலில்தான்.சில வருடங்களில் என் சின்னஞ்சிறு தோழன் அசுர வளர்ச்சியுடன் நான் கட்டியணைக்க முடியாமல் திணறும் படி வளர்ந்துவிட்டான். உனக்கு நிறைய தண்ணீருடன், என்னுடைய அன்பையும் ஊற்றினேன் போல, அதனால் தான் இந்த அசுரவளர்ச்சியோ என்று பலமுறை யோசித்ததுண்டு.

 நான் பெருமையுடன் உன் வளர்ச்சி பற்றி பீற்றிகொள்கையில், அப்பா இந்த மரம் இருந்தால் சுற்று சுவர் விழுந்துவிடும் ,விரிசல் பெரிதாகிவிட்டது என்று ஆரம்பித்துவிட்டார்.என்னுடைய கெஞ்சலும்,கொஞ்சலும் , அழுகையும்,ஆர்ப்பட்டமும் சேர்ந்து உன்னை காப்பாற்ற முடிந்தது.அது தற்காலிக முயற்சி என்று தெரியவில்லை என் புத்திக்கு . உன் நீர் பாசனத்தில் என் அன்பை கலக்காமல் இருந்திருக்கலாமோ என்று அதன் பின் பல முறை கண்ணீர்ல் நினைந்ததுண்டு…

மேற்ப்படிப்பிற்கு வேற்றிடம் செல்கையில் அம்மாவிடம் ஆயிரம் முறை உன்னை நன்றாக பார்த்துக்கொள்ள சொல்லி சென்றது இன்றும் என் நினைவில். என் முதல் "காதல்" - இல்லை இல்லை - "நேசம்" பூத்த சமயம்… .விடுமுறைக்கு ஊர் வந்து, நான் நாணம் பூசிக்கொண்டு உன்னிடம் வந்து நிற்கையில் என் மேல் கோபம் கொண்டு மலர் சொரியாமல் நின்றாய். பிறகு நீ தான் என் தோழன் என்றும், அவன் நேற்று முளைத்தவன் என்றும், எனக்கு பிள்ளை பிறந்தால் உன் கிளையில் தான் முதல் தூளி கட்டுவேன் என்றும் உன்னை தேற்றினேன். என் வெட்கம் தின்று, எங்கள் இருவர் பெயரையும் உன் மேல் எழுதியவுடன் பூக்கள் சொரிந்து வாழ்த்து கூறினாய். நீ அல்லவோ என் உயிர் நண்பன். அப்பொழுது தெரியாது என் உயிர் தோழனும்,நேசித்தவனும் ஒரே சமயம் என்னை பிரிவார்கள் என்று.

முதல் நேசம் முற்று பெறாமல் கண்ணீருடன் வருகையில் நீ இருப்பாய் என்னை தாங்கிக்கொள்ள என்று உன் மடி தேடி வந்து நின்றேன்….நீ என் உற்ற தோழனாய் என்னை பரிகாசம் செய்யாமல் என் மனம் புரிந்து அமைதியாய் என் சோக கதைக்கு காது கொடுத்தாய்.

ஆனால் அப்பா இந்தமுறை என்னுடைய கண்ணீர், கதறல் எதற்கும் காதுகொடுக்காமல் உன்னை வீழ்த்த முடிவுக்கு வந்துவிட்டார். என்னுடைய வாழ்க்கையில் அது ஊழி காலம், நேசித்தவனையும் ,தோழனையும் ஒரே சமயத்தில் இழந்து என்றுமே வற்றாத கங்கை என என் கண்ணீர்.இ ன்றும்,  நீ இல்லாத அந்த வீடு கலையிழந்து,ஒரு செங்கல் சுவராக மட்டுமே இன்று உள்ளது.

காலம் எல்லா வித வலிகளையும் ஆற்றவல்லது… நானும் என் வாழ்க்கை பயணத்தில்…இன்றும் எங்காவது புங்க மரம் பார்க்கும்போதெல்லாம் என் தோழன் உன் நினைவு மட்டுமாக.

இன்று, என் அம்மா என் குழந்தைகளிடம் "உங்க அம்மா அந்த புங்க மரம் வெட்டும் போது அழுத அழுகை இருக்கே" என்று ஸ்வாரியசியமாக கதை சொல்லும்போதெல்லாம் இன்றும் கண்ணீர் சுரக்கிறது - இன்னும் கூட உனக்கான என் கண்ணீர் மிச்சம் இருக்கிறது.

கருத்துகள் இல்லை: