சனி, 27 அக்டோபர், 2012

கரும்பு சாறும் கார்பரேட் வாழ்க்கையும்!!


எனக்கும் கரும்பு சாறுக்கும் மிக நீண்டகால வரலாறு உண்டு.பெரியப்பாவுக்கு எறையூர் சக்கரை ஆலையில் வேலை, காலாண்டு, அறையாண்டு, முழாண்டு விடுமுறைக்கு அங்கே தவறாமல் செல்வோம்.

எல்லா ஆண்டும் ஆலை உள்ளே சென்று கரும்பு சாறு குடிப்பது வாடிக்கை. ஆலை பிரவேசத்திற்கு தயாராவது ஒரு மிகப்பெரிய சவால். கறுப்பும் கருப்புசார்ந்த வண்ணத்தில் உடை தேடுவதில் தொடங்கி , ஒரு காலி தண்ணி கேன் தேடி , எப்போதும் எலுமிச்சை பழம் வாங்க மறந்து கடைசி நிமிஷம் ஓடி வாங்கிவந்து, இப்படி ஆலை பிரவேசம் என்பது மிக பரபரப்பான தருணம்.



நாங்கள் தான் ஒவ்வொரு முறையும் புதுப்புது எதிர்பார்ப்புகளுடன் தயாராவது.அதே ஆலை, எந்த மாற்றமும் இன்றி… கரும்பு எந்திரத்தில் போடுவது,சுத்தீகரிப்பது ,இப்படி மேம்போக்காக சுற்றிவிட்டு, பூப்போல கொட்டும் சர்க்கரையை பார்ப்பது ஒரு அலாதியான சுகம். அள்ளி அள்ளி தின்று, திகட்டி போதுமென்று வெளியேறி, கடைசியாக கரும்பு சாறு.

மற்றவர்கள் எல்லோரும் கரும்பு சாறுக்காக சர்க்கரையை சுவைக்காமல், முட்ட முட்ட சாறு குடிப்பார்கள். நான் மட்டும் ஒவ்வொரு முறையும் சர்க்கரையை மட்டும் திகட்ட திகட்ட தின்றுவிட்டு கரும்பு சாறு சுவைக்காமல் வருவேன். அண்ணா,அக்கா எல்லோரும் திட்டி தீர்த்தார்கள், இந்தமுறையும் கரும்பு சாறு குடிக்காமால் வந்ததிற்க்கு …விடுமுறை முடிந்து கல்லூரி செல்கையில் தோழிகளுடன் சொல்லும் முதல் கதை  இதுவே.


காலங்கள் ஓட, இன்று பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை- மிகவும் பரபரப்பாக வாழ்க்கை. எல்லா மத்திய உணவு இடைவேளையும் சக தோழர்கள் அனைவரும் பழ சாறு குடிக்க, நான் மட்டும் தினமும் கரும்பு சாறு குடிக்கிறேன்.
சாறு குடிக்கும் அந்த பத்து நிமிஷம், ஏசி குளிர்,சக தோழர்கள்,மீட்டிங், கால், கிளளையன்ட், அந்த அமைதியான இடம், எல்லாம் மறந்து ஆலையின் சத்தமமும், பிசுபிசுப்புமும், அண்ணா,தம்பி,அக்காவுடனான சண்டையும் , சர்க்கரையை அள்ளித்தின்று போட்டிருந்த உடையிலேயே கைதுடைத்ததும், தோழி கல்பனாவின் திட்டும் என்று நினைவுகளில் பின்நோக்கி பயணிப்பது ஒரு அலாதியான சுகம்.

காலி கோப்பையை கிழேவைக்கும் போது ,மனம் முழுவதும் தித்திப்பு.ஒரு சில சமயங்களில், அய்யோ இன்று வெளிர் நிற உடையாயிட்ற்ற்றே-சாறு குடிக்கும்போது ஆலையின் அழுக்கு ஒட்டிக்கொள்ளுமோ என்றும்கூட நினைப்பதுண்டு.

கரும்பு சாறு குடிக்கையில் ஏன் உன் முகத்தில் மந்தகாசம் என்று கேட்கும் எல்லோருக்குமான பதில் என் புன்னகை மட்டுமே. விளக்கமுடியவில்லை, கரும்பு சாறு கொடுக்கும் சந்தோஷத்தை யாரிடமும்.

கருத்துகள் இல்லை: