செவ்வாய், 18 டிசம்பர், 2012

குழந்தை தொழிலாளர் !!


அப்பாவின் குடிக்கும்
ஆத்தாவின் பசிக்கும்
வெளியில் வரும் பிள்ளைக்கு
வேலை தந்து - ஒரு
வம்சத்தையே
வீதிக்கு இழுக்கிறோம்
நாம் !

கூரையும் சுவரும்
மறுத்து - அவனுக்கு
கதவுகள் மட்டும்
கொடுக்கிறோம்
நாம் !

பிஞ்சிலேயே காய்க்கின்றன
கைகள் - அதை
களவாடித் தின்னும்
பயனாளி
நாம் !

ஒரு குடும்பத்தின் ஏழ்மையை
காரணம் சொல்லி - தினம்
குழந்தைப் பிணம்
தின்கிறோம்
நாம் !

நாம் என்று சொன்னால்
கம்மியாய் தான்
உறுத்துமோ? - அந்த
நாமையெல்லாம்
நீ என்று
மாற்றிப் படி
உள் மனது
உனக்கும் தரும்
செருப்படி !

குழந்தையின் சேவையை
மறு


பிஞ்சுகள் செய்த
பொருட்களை
வெறு
 
அவன் படித்து முடித்து
நாட்டைக் காப்பான்
சற்றாவது பொறு !
 
- அகன்


கருத்துகள் இல்லை: